அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு மீண்டும் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
மண்டேலா, பொம்மை போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் யோகி பாபு.
விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜ்மோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்.
இதற்கு முன்பு பொம்மை படத்தை இயக்கிய ஷானுக்கும் அதுதான் முதல் படம். யோகி பாபு தான் அவரின் முதல் நாயகன். (ராசியான நாயகன் போல)
இந்த வரிசையில் தற்போது ராஜ்மோகன் படத்துக்கும் யோகி பாபு நாயகனாகியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரும்புக்கடையில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. சமூகத்தில் அடிப்படை விஷயங்களுக்காக அந்த இளைஞன் சந்திக்கும் சவால்களே படத்தின் திரைக்கதையின் அடித்தளமாக்கப்பட்டுள்ளது.
கதைக்கான பாத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் உறுதியான நிலையில், தமிழ்ப் புத்தாண்டான இன்று படத்தின் படப்பிடிப்பு முருகன் கோயிலில் பக்தி மனத்துடன் தொடங்கியது.
இதனிடையே மண்டேலா படத்தில் யோகி பாபுவுக்கு விருதுகள் கிடைத்த நிலையில், இப்படத்திலும் விருதுகள் வாங்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Leave a Reply