அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கோரி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் குட் பேட் அட்லி. இந்தப் படத்தில் நிறைய பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை இணையத்தில் தற்போது டிரென்டாகியும் வருகின்றன. இதில் இளையராஜா பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 1983-ல் வெளியான சகலகலா வல்லவனிலிருந்து இளமை இதோ இதோ, 1986-ல் வெளியான விக்ரம் படத்திலிருந்து என் ஜோடி மஞ்சக் குருவி, 1996-ல் வெளியான நாட்டுப்புறப் பாட்டு படத்திலிருந்து ஒத்த ரூபாயும் தாரே என மூன்று இளையராஜா பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்கூட்டியே அனுமதி எதுவும் கோரியதாகத் தெரியவில்லை. இந்நிலையில், அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கோரி இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன், ஒய் ரவி ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்டஈடு, படத்திலிருந்து பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும், அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை வெளியிட வேண்டும் என இளையராஜா தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி மற்றும் மலையாளப் படமான மஞ்சும்மெல் பாய்ஸ் படங்களில் தன்னுடையப் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply