அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போலீஸ் சோதனைக்குப் பயந்து தப்பியோடியது சர்ச்சையாகியுள்ளது.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜயின் பீஸ்ட், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இவர் கொச்சியில் தங்கியிருந்த பிரபல விடுதியொன்றில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு திடீரென சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
சோதனை நெருங்குவதற்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ அந்த விடுதியிலிருந்து தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தப்பியோடிய காணொளி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அந்த விடுதியிலிருந்து சட்டவிரோதமான பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் கேரளத்தில் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, கொச்சியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக 2015-ல் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு தான் ஷைன் டாம் சாக்கோ விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்தக் காணொளி வெளியாகியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
அவர் இருசக்கர வாகனத்தில் தப்பியிருக்கலாம் என்றும் யாருடைய வாகனத்தைப் பயன்படுத்தி தப்பினார் என்பது தெரியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஷைன் டாம் சாக்கோவுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, படப்பிடிப்புத் தளத்தில் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை ஒருவர் புகாரளித்துள்ளார்.
Leave a Reply