சூரியின் புது பட பேருக்கு அர்த்தம் என்ன?

நடிகர் சூரி மண்டாடி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பெயர் புதிதாக இருக்கவே, இதற்கு என்ன அர்த்தம் என பலரிடையே கேள்வி எழுந்துள்ளது. இக்கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கருடன், கொட்டுக்காளி என கதை அம்சம் இருந்த படத்தில் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்டார்.

விலங்கு தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ், பிக் பாஸ் சாச்சனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மண்டாடி என்றால் என்ன?

மண்டாடி என்பது வட்டார வழக்குச் சொல். கடற்கரையையொட்டி வாழும் மக்கள் பயன்படுத்தும் சொல். கடல் நீர் பற்றியும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் ஆழ்ந்த அனுபவமுள்ளவரை மண்டாடி என்பார்கள். இதனால் இப்படம் கடற்கரை வாழ் மக்களை மையப்படுத்திய கதை போலத் தெரிகிறது. ஃபர்ஸ்லுக் போஸ்டரில் சூரி இந்த பாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறார். நடிப்பில் எப்படி இருக்கிறார் என்பதை படம் ரிலீஸ் ஆனதும் பார்க்கலாம்.