சூர்யா நடிப்பில் மே 1 அன்று வெளியாகவிருக்கும் ரெட்ரோ திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் முதன்முதலாக இணைந்துள்ள திரைப்படம் ரெட்ரோ. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடல்கள் மூலம் ஏற்கெனவே ஹிட் கொடுத்துவிட்டார். படத்தின் டீசர், டிரெய்லர்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன.
படம் மே 1 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கான விளம்பரப் பணியின் பகுதியாக படக் குழுவினர் நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்கள். கலாட்டாவுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ், ரெட்டோ திரைப்படம் தொடக்கத்தில் ரஜினிக்கு எழுதியாகக் கூறினார்.
“இந்தக் கதை விஜய்காக எழுதப்பட்ட கதை அல்ல. இதை நான் ரஜினியை மனதில் வைத்து எழுதினேன். தொடக்கத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் மற்றும் மாஸ் தருணங்கள் இருந்தன. பிறகு, கதை அடுத்தடுத்து நகர்ந்தவுடன் இது காதல் கதை என்பதை உணர்ந்தேன். அப்போது தான் கதைக்குள் சூர்யா வந்தார்.
கதையைப் படித்தவுடன் இது ரஜினிக்காக எழுதப்பட்டது என்பதை சூர்யா கண்டுபிடித்துவிட்டார்” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
விஜய்க்கு கதை சொன்னது பற்றிய கூறிய அவர், “விஜயின் இறுதிப் படத்துக்காக நான் கதை சொன்னது உண்மை தான். கடந்த காலங்களில் அவரிடம் நான் நிறைய முறை பேசியுள்ளேன். ஜிகர்தண்டாவுக்குப் பிறகு விஜய் என்னிடம் பேசினார். என்னிடம் படம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். அன்று முதல் விஜய்க்கு நிறைய கதைகளைக் கூறியுள்ளேன். ஆனால் பலருக்குத் தெரிந்தது தான், எனக்குச் சரியாகக் கதை சொல்லத் தெரியாது. எனவே, அவை எதுவும் முன்னேற்றம் காணவில்லை” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
Leave a Reply