கையில் தாலியுடன் டியூடாக வரும் பிரதீப் ரங்கநாதன்

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்துக்கு டியூட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் மற்றும் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படங்களில் நடித்தார். இதில் டிராகன் திரையரங்குகளில் நல்ல வெற்றியைப் பெற்றது. லவ் இன்சுரன்ஸ் கம்பெனி இன்னும் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து, நான்காவது படத்தில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரனுடன் கைக்கோர்த்தார் பிரதீப் ரங்கநாதன். தொடக்கத்தில் பிஆர்04 என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. மமிதா பைஜு இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு அஜித்தின் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து, தமிழில் இது இரண்டாவது படம். இந்தப் படத்துக்கு டியூட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜின் பைசன் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிமுக இயக்குநரான கீர்த்தீஸ்வரன் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். சூரரைப் போற்று, பாவக் கதைகள் மற்றும் புத்தம் புது காலையில் சுதா கொங்கராவின் படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.