திருமண நிகழ்ச்சிக்கு கெனிஷாவுடன் ரவி மோகன் சென்ற நிலையில், ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரவி மோகன் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக கடந்த செப்டம்பரில் அறிவித்தார். சென்னை நீதிமன்றத்தில் நவம்பரில் விவாகரத்து கோரினார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனை கெனிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா மிகக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் திரைப் பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.
ரவி மோகன் கெனிஷாவுடன் திருமண விழாவில் பங்கேற்றார். இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மகன்களின் அமைதிக்காகவே இவ்வளவு நாள்களாக மௌனம் காத்து வந்தேன். விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து வருகிறது. அவர் என்னைவிட்டு மட்டும் விலகிச் செல்லாமல், வாக்குறுதி அளித்த கடமைகளிடமிருந்தும் விலகிச் சென்றுள்ளார். மகன்களுக்கு மனரீதியாகவும் பணரீதியாகவும் எந்த உதவியையும் செய்யவில்லை. வங்கி மூலம் நாங்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம். பணத்துக்கு அப்பாற்பட்டு அன்பைத் தேர்வு செய்ததால், இந்த நிலை. இருந்தபோதிலும், இதில் எனக்கு வருத்தமில்லை. சட்டரீதியான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மகன்கள் பெரியவர்கள் கிடையாது. ஆனால், கைவிடுதலைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உணர்வுடையவர்கள். நான் மனைவியாக அல்லாமல் தாயாகப் பேசுகிறேன். தந்தை என்பது வெறும் தலைப்பு கிடையாது. அதுவொரு பொறுப்பு. சட்டம் மற்றும் நான் முடிவு செய்யும் வரை ஆர்த்தி ரவியாகவே தொடர்வேன். சட்ட நடவடிக்கைகள் முடிவடையும் வரை ஊடகங்கள் என்னை முன்னாள் மனைவி எனக் குறிப்பிட வேண்டாம். மகன்கள் இருவரும் இன்னும் உங்களை அப்பா என்றே அழைக்கிறார்கள். அவர்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று ஆர்த்தி ரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply