சூர்யாவின் ரெட்ரோ ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோவும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலியும் மே 1 அன்று ஒரே நாளில் வெளியானது. ரெட்ரோ பெரிய பட்ஜெட்டில் உருவானது. டூரிஸ்ட் ஃபேமிலி பட்ஜெட்சில் சிறிய படம். ஆனால், திரையரங்குகளில் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் ரெட்ரோவை விட டூரிஸ்ட் ஃபேமிலிக்கு அதிக கூட்டம் கூடியது. டூரிஸ்ட் ஃபேமிலி படக் குழுவினர் வெற்றி விழாவையே கொண்டாடிவிட்டார்கள்.
இதற்கு நடுவில் தான் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர், “ரெட்ரோவின் ஒட்டுமொத்த வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் கடந்துவிட்டது. இதை வெளிப்படையாக அறிவிக்கிறேன்” என்று குண்டை வீசிச் சென்றார்.
சமூக ஊடகங்களில் டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிப் படமாகப் பாராட்டுகளைச் சம்பாதித்து வந்தது. வசூல் பிரச்னை ரெட்ரோவுக்கு அழுத்தமாக மாறத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனால், படத்தின் வசூல் விவரத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் படக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளதா என்ற எண்ணம் எழுகிறது. காரணம், படம் வெளியாகி 18 நாள்களுக்குப் பிறகு வசூல் விவரத்தை மீண்டும் வெளியிட்டுள்ளது 2டி என்டர்டெயின்மென்ட்.
உலகளவில் ரெட்ரோ திரைப்படம் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளது. திரையரங்கு மற்றும் திரையரங்கு சாராத வசூலையும் இந்த அறிவிப்பு உள்ளடக்கியுள்ளது.
உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், ரெட்ரோ அளவுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் அள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதிக வசூல் குவித்தது எது என்பதல்ல கேள்வி. படத்தின் மொத்த செலவோடு ஒப்பிடுகையில் கிடைக்கும் வசூல் விகிதத்தை அடிப்படையாகக் கொள்வதே சரியான மதிப்பீடாக இருக்க முடியும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஒருவேளை டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம்.
Leave a Reply