சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸா 47’ பாடலை நீக்கக் கோரியும் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கோரியும் திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் பாஜக தலைவருமான பாணு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இதில் இடம்பெற்றுள்ள `கிஸ்ஸா 47’ பாடல் சர்ச்சையாகியுள்ளது. பெருமாள் பாடல் வரிகளான “ஸ்ரீனிவாச கோவிந்தா ஸ்ரீவெங்கடேச கோவிந்தா” இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
பாடல் சர்ச்சை குறித்து சந்தானம் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் விளக்கமளித்தார். தானே பெருமாளின் தீவிர பக்தர் என்பதால், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று சந்தானம் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும், இப்பாடலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினர் மற்றும் ஆந்திர பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சந்தானம் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகவும் பானு பிரகாஷ் ரெட்டி அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திலிருந்து பாடலை நீக்காவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளார்கள்.
Leave a Reply