ஜிங்குச்சா பாடல் வரிகளை எழுதியது ரஹ்மானா?

kamal rahman

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. தக் லைஃப் படத்திலிருந்து ஏற்கெனவே இரு பாடல்கள் வெளியாகியிருந்தன. முதலில் வெளியான ஜிங்குச்சா பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையத்தில் கலக்கியது. இப்பாடலை எழுதியது கமல்ஹாசன்.

இசை வெளியீட்டு விழாவில் ஜிங்குச்சா பாடல் வரிகளை எழுதியது பற்றி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “ஜிங்குச்சா என்ற சொல் என்னிடமிருந்து வந்தது அல்ல. ரஹ்மான் எழுதியது. நான் பழைய மோட்டார் சைக்கிளை போன்றவன்.

கூடுதலாக ஒரு கிக் ஸ்டார்ட் கொடுத்தாலே நான் ஆரம்பிப்பேன். பாடலின் முதல் வரியை இசையமைப்பாளர் எழுதினால் தான் மீதமுள்ள பாடல் வரிகளை நான் எழுதுவேன். பாடலின் முதல் வரியை எழுத ரஹ்மான் நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. உடனடியாகக் கொடுத்துவிட்டார்” என்றார் கமல்ஹாசன். ஜிங்குச்சா என்ற சொல் தான் இன்ஸ்டகிராமை கலக்கி வருகிறது.

இப்பாடல் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “இந்த இடத்தில் வேறொரு பாடல் தான் இருந்தது. கமல்ஹாசன் ஓகே சொன்னார். இருந்தபோதிலும், இப்பாடல் நன்றாக இருக்கும் என்றேன். அவருக்கு மெட்டுகளோடு கவனம் ஈர்க்கும் வரிகளைச் சேர்த்து காண்பித்தேன். இருவரும் ஒப்புக்கொண்டோம்” என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். நாயகனுக்குப் பிறகு இருவரும் கைக்கோர்த்துள்ளதால், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கூடுதலாக, சிம்பு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதும் டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளும் மிரட்டியிருக்கிறது. த்ரிஷா, அபிராமி, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமும் படம் குறித்து விளம்பரப் பணிகளில் பேசி வருவது சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

இப்படம் ஜூன் 5 அன்று வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *