தொல்லியல் ஆராய்ச்சிகளைக் காட்டும் பொருநை என்ற ஆவணப் படத்தை தயாரித்திருப்பது குறித்து ஹிப் ஹாப் ஆதி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்பு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து தமிழி என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக இந்தப் பொருநை ஆவணப் படத்தை வெளியிடவுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது,
2016-ல் தொடங்கி 2019 வரை நான்கு வருடம் தமிழ் எழுத்துகள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஒரு வரலாற்று ஆவணப் படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெற்றுத் தந்தது. இந்த ஆவணப் படம் முடியும் தருவாயில் ‘பொருநை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படம் உருவாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம்.
2021-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியைக் கண்டறிய பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கிய போது, அவர்களது அனுமதியுடன் அந்த பணிகளை ஆவண படமாக்க 2021 முதல் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் உண்மையானது.
அதில். உலக அளவில் பழமை வாய்ந்த இரும்பு கலாச்சாரம் தொடங்கியது தமிழ் மண்ணில் இருந்து தான் என்ற கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு உலகையே தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், இதற்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உள்ள ஒரு பகுதியில் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது.
இந்தியாவில் தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது இதுவே முதன்முறை. நான்கு வருடமாக நடந்து வந்த இந்தப் பணியில் எவ்வளவோ மணிக்கணக்கில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முக்கிய தகவல்களை தேர்வு செய்து ஆவணப் படமாகச் சுருக்கி கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்.
முற்றிலுமாக இது இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு பிறகு உலக முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு செய்திருக்கிறோம்.
தமிழியை பொதுவுடைமையாக வழங்கினோமோ அதுபோல் ‘பொருநை’ ஆவணப் படத்தை பொதுவுடைமையாக வழங்கத் தயாராக இருக்கிறோம் என ஆதி குறிப்பிட்டார்.
Leave a Reply