கர்நாடகத்தில் தக் லைஃபை வெளியிட மாட்டேன்: விநியோகஸ்தர் ஓபன் டாக்!

கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட மாட்டேன் என அப்படத்தை விநியோகிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ள விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் மொழியிலிருந்து கன்னடம் வந்ததாக கமல் ஹாசன் பேசியது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் உருவானது. கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையும் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் படத்தைத் திரையிட மாட்டோம் என்றார்கள்.

கமல் ஹாசனும் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் உறுதியாக இருந்ததால், ஜூன் 5 அன்று கர்நாடகம் தவிர்ந்து மற்ற இடங்களில் தக் லைஃப் வெளியானது. இதனிடையே, தக் லைஃப் படத்தைக் கர்நாடகத்தில் வெளியிடுவது தொடர்பாக கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கமல் ஹாசனுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.

அதேசமயம், தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் தக் லைஃப் படம் திரையிடப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும் கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிடப்போவதில்லை என அப்படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ள விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது விஆர் ஃபிலிம்ஸின் வெங்கடேஷ் கமலாகர். தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் கூறுகையில், “தக் லைஃப் படத்தை நான் வெளியிடப்போவதில்லை. முதலிரு வாரங்களில் தான் ஒரு படம் வசூலைக் குவிக்கும். தக் லைஃப் வெளியாகி ஏற்கெனவே இரு வாரங்கள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டிலேயே படம் நன்றாக ஓடவில்லை” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *