கமல்ஹாசன் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தக் லைஃபின் முதல் பாடல் இன்று வெளியானது.
1987-ல் வெளியான நாயகன் படத்துக்குப் பிறகு மணி ரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் சிம்பு, அஷோக் செல்வன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னை, புதுதில்லி, புதுச்சேரி, காஞ்சிபுரம் , செர்பியா என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த நவம்பர் 2023-ல் படத்துக்கு தக் லைஃப் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் காணொளி மூலம் அறிவிக்கப்பட்டது. ஜூன் 5-ல் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் அதிகாரபூர்வ விளம்பரப் பணிகளைப் படக் குழு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இன்று நண்பகல் 12.30 மணியளவில் வெளியிடப்பட்டது. இப்பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
இதையொட்டி மணி ரத்னம், கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
இப்பாடல் இணையத்தில் வெளியானது முதல் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கமலின் பாடல் வரிகள், சிம்பு மற்றும் கமல் இணைந்து போட்ட குத்தாட்ட நடனம் உள்ளிட்டவை பேசுபொருளாக உள்ளன.
செய்தியாளர்கள் சந்திப்பில் தக் தருணம் குறித்து பேசினார்கள். மணி ரத்னமும், கமல்ஹாசனும் இனி தான் தக் தருணம் வரவுள்ளதாகக் கூறினார்கள். மணி ரத்னத்துடன் இணைந்ததை தக் தருணம் என ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டார். மேடையில் கமல்ஹாசனுக்கு அடுத்த அமர்ந்திருப்பது தக் தருணம் என சிம்பு தெரிவித்தார்.
Leave a Reply