அரசியலுக்கு லீவு… மீண்டும் சூட்டிங் சென்ற பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இதனால், தனது அரசு அலுவல் பணிகளை சில காலத்திற்கு அவர் மேற்கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டுவந்தார். அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்தும் கண்டனம் தெரிவித்தும் அரசியல் களத்தில் கலக்கி வருகிறார்.

இதனிடையே மீண்டும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளார் பவன். ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் தே கால் ஹிம் ஓஜி (எ) ஓஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் தாதாவாக பவன் கல்யாண் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யாணின் அரசியல் ஈடுபாட்டினால் தள்ளிப்போனது.

இதனிடையே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால், பவன் கல்யாணின் காட்சிகள் அனைத்தும் வரும் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் படம் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் துணை முதல்வர் பவன் கல்யாண் மீண்டும் நடிக்க வந்துள்ளதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *