கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது.
நாயகனுக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கைக்கோர்த்துள்ளார்கள். படத்துக்கு இதுவே பெரிய ஈர்ப்பு என்றால் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் எனப் பெரிய நட்சத்திரங்கள் படத்தில் உள்ளது கூடுதல் பலம்.
எமனிடமிருந்து உயிரைக் காப்பாற்றிய சிறுவனுடன் கதையைச் சொல்லி டிரெய்லரை ஆரம்பிக்கும் கமல், எமனாக மாறி நிற்கும் அதே சிறுவனை (சிம்பு) இறுதியில் எதிர்கொள்கிறார். கமலும் சிம்புவும் மோதிக்கொள்ளும் காட்சி பெரும் வரவேற்பைக் கிளப்பியுள்ளது.
கமல்ஹாசன் தான் ரங்கராய சக்திவேல். அமரனாக வரும் சிம்பு, “இனி நான் தான் ரங்கராய சக்திவேல்” என அவ்விடத்தை அடைய விரும்புகிறார். டிரெய்லரில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சியில் சிம்பு ஜொலிக்கிறார். தமிழ் சினிமாவில் கமலுக்கு நிகராக நடிப்பு, எழுத்து, இயக்கம், நடனம், பாடல் என எல்லா துறைகளிலும் திறமை கொண்டவர் எனப் பெயர் எடுத்தவர் சிம்பு. முத்தக் காட்சிகளையும் சேர்த்துக்கொள்வோமே… இப்படி இருக்கும்போது கமல் இடத்தில் (ரங்கராய சக்திவேல்) இனி நான் தான் என சிம்பு (அமரன்) சொல்வது மாதிரியான காட்சியை யாரால் தான் ரசிக்காமல் இருக்க முடியும்.
டிரெய்லருக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலர் நாயகனின் தொடர்ச்சி என்கிறார்கள். சிலர் செக்கச் சிவந்த வானத்தை நினைவூட்டுவதாகக் கூறுகிறார்கள். டிரெய்லரிலேயே கதையைச் சொல்லிவிட்டு இறுதியில் கமல் மற்றும் சிம்பு மோதிக்கொள்வார்கள் என்பதையும் காட்டிவிட்டால், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு என்னதான் சுவராஸ்யம் மிச்சம் இருக்கும் என்ற விமர்சனமும் உள்ளது.
எது எப்படியாக இருந்தாலும் ஜூன் 5 அன்று கமலும் சிம்புவும் மோதிக்கொள்வதைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.
Leave a Reply